மும்பையில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்திக்கிறது. இத்தொடரில் இரண்டு முறை டெக்கானிடம் தோல்வியடைந்துள்ள சென்னை அணி, இன்று பழி தீர்த்து, பைனலுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, தற்போது "நாக் அவுட்' முறையிலான போட்டிகள் நடக்கின்றன. இன்று நவி மும்பையில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் சென்னை கிங்ஸ் அணி, கில்கிறிஸ்ட் தலைமையிலான "நடப்பு சாம்பியன்' டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வந்த வழி:
சென்னை அணி, இம்முறை துவக்கத்தில் திணறிய போதும், பின் சுதாரித்துக் கொண்டது. லீக் சுற்றில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன், (14 புள்ளி),மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
மாற்றம் வருமா?
சென்னை அணியின் பலம் பேட்டிங் தான். அதிரடி துவக்க வீரர் ஹைடன், டில்லிக்கு எதிராக 93 ரன்கள் எடுத்தார். அவ்வளவு தான். பின் தொடர்ந்து ஏமாற்றுகிறார். இன்று இவர் சோபிக்க வேண்டும். "டுவென்டி-20' உலக கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள முரளி விஜய், ரெய்னா அதிரடியை தொடர வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான முக்கிய லீக் போட்டியில், கடைசி ஓவரில் 16 ரன்கள் விளாசிய, கேப்டன் தோனி அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். இதே போல இன்றும் சாதித்தால், பைனலுக்கு சென்னை முன்னேறுவது உறுதி. மார்கல், கெம்ப் ஆகியோரும் நம்பிக்கை தருகின்றனர்.
பவுலிங் நம்பிக்கை:
ஆஸ்திரேலியாவின் போலிஞ்சர் வந்த பின் பவுலிங் முன்னேற்றம் அடைந்துள்ளது. இவருடன் மார்கல், கெம்ப் ஆறுதல் தரலாம். சுழலில் எழுச்சி கண்ட அஷ்வின், ஜகாதி மற்றும் முரளிதரன் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
டெக்கான் எழுச்சி:
டெக்கான் அணி ஒரு கட்டத்தில் தொடர்ச்சியான 5 தோல்வியுடன் பட்டியலில் 7வது இடத்தில் இருந்தது. பின் திடீரென எழுச்சி கண்ட இந்த அணி, வரிசையாக 5 வெற்றிகளை பெற்று, 16 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி ஆச்சரியம் அளித்தது.
"கில்லி' ஏமாற்றம்:
அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட், இத்தொடர் முழுவதும் "பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். ஆனால் பின் வரும் வீரர்கள் சுமன், ரோகித் சர்மா, சைமண்ட்ஸ், கிப்ஸ் ஆகியோர் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற வைக்கின்றனர். இது இன்று தொடர்ந்தால் சென்னைக்கு சிக்கல் தான்.
ஓஜா அசத்தல்:
வேகப்பந்து வீச்சில் வாஸ், ஹாரிஸ், ஆர்.பி.சிங் என, எல்லோரும் சாதிப்பது, கேப்டன் மற்றும் நிர்வாகத்துக்கு ஆறுதல் தந்துள்ளது. தவிர, இத்தொடரில் அதிக விக்கெட் (20) வீழ்த்தியவர்கள், வரிசையில் முதலிடத்தில் உள்ள பிரக்யான் ஓஜாவுடன் சைமண்ட்ஸ், ரோகித் சர்மா ஆகியோர் "பார்ட் டைம்' பவுலிங்கில் அசத்துவதும் டெக்கான் அணிக்கு பெரும்பலம்.
டெக்கான் ஆதிக்கம்:
இதுவரை இரு அணிகளும் 6 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரண்டு முறை சென்னை அணியும், 4 முறை டெக்கான் அணியும் வென்றுள்ளன.
----
இவர்களை கவனியுங்கள்...
* சுரேஷ் ரெய்னா
மூன்றாவது ஐ.பி.எல்.,தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் நான்காவது (461) இடத்தில் இருப்பவர் சுரேஷ் ரெய்னா. இதுவரை 3 அரைசதம் அடித்துள்ள இவர், முக்கியமான நேரத்தில், அணிக்கு கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.
* முரளி விஜய்
அணியின் துவக்க வீரராக களமிறங்கும் இவர், பேட்டிங்கில் பெரும் எழுச்சி கண்டுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிராக, அதிரடியாக 57 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார் இவர். இதுவரை ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 417 ரன்கள் குவித்துள்ள விஜய் மீது இன்றும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
* முரளிதரன்
இம்முறை ஆரம்பத்தில் இருந்தே, சென்னை அணிக்கு சுழலில் ஆறுதல் தந்து வருகிறார். இதுவரை 10 போட்டியில் 13 விக்கெட் சாய்த்துள்ள இவர், வாய்ப்பு கிடைத்தால் அசத்துவார்.
* அஷ்வின்
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் சுழற் பந்து வீச்சின் புதிய கண்டு பிடிப்பு அஷ்வின். புதிய பந்தில் அணியின் பவுலிங்கை துவக்கும் இவர், துவக்க ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி, நம்பிக்கை தருகிறார். இதுவரை 12 விக்கெட் (10 போட்டி) கைப்பற்றியுள்ளார்.
----
டெக்கான் சார்ஜர்ஸ்
* சைமண்ட்ஸ்
இதுவரை 14 போட்டிகளில் பங்கேற்றுள்ள சைமண்ட்ஸ், 4 அரைசதம் உட்பட 404 ரன்கள் எடுத்துள்ளார். இலக்கை சேஸ் செய்யும் போது, கடைசிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெறச் செய்வார். முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி "ஆல் ரவுண்டராக'வும் அசத்துவார்.
* ரோகித் சர்மா
"மிடில் ஆர்டரில்' நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர் இதுவரை 3 அரைசதம் உட்பட 402 ரன்கள் குவித்துள்ளார். தவிர, சிறந்த பீல்டர் மற்றும் "பார்ட் டைம்' பவுலிங்கில், திருப்புமுனை ஏற்படுத்துவதில் வல்லவர்.
* பிரக்யான் ஓஜா
சுழற்பந்து வீச்சில் தொடர்ந்து அசத்தும் இவர், தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார். இதுவரை 20 வீழ்த்தி, "பர்பிள்' தொப்பி பெற்றுள்ள ஓஜா, மீண்டும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஹாரிஸ்
தொடரில் பாதியில் வந்த இவர், விக்கெட்டுகளை சாய்ப்பதில் பஞ்சம் வைக்கவில்லை. இதுவரை 6 போட்டியில் 11 விக்கெட், வீழ்த்தியுள்ள இவரது வேகத்தில், கடைசி நேர பேட்ஸ்மேன்கள் எளிதாக சிக்கிவிடுகிறார்கள்.
----
அணி விபரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
தோனி (கேப்டன்), ஹைடன், முரளி விஜய், ரெய்னா, பத்ரிநாத், மார்கல், கெம்ப், மைக்கேல் ஹசி, முரளிதரன், அஷ்வின், ஜகாதி, பாலாஜி, சுதீப் தியாகி, போலிஞ்சர் மற்றும் துஷாரா.
டெக்கான் சார்ஜர்ஸ்
கில்கிறிஸ்ட் (கேப்டன்), பிரக்யான் ஓஜா, லட்சுமண், கிப்ஸ், சுமன், ரோகித் சர்மா, சைமண்ட்ஸ், மோனிஷ் மிஸ்ரா, ராகுல் சர்மா, மைக்கேல் மார்ஷ், வாஸ், ஜஸ்கரன் சிங், ஹர்மீட் சிங், ஆர்.பி.சிங் மற்றும் டுவைன் ஸ்மித்.
துபாய்: உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து வரும் 2011 ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணிக்கு, ரூ. 18 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த உலககோப்பை தொடரை (2007) விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2007 ம் ஆண்டு நடந்த தொடரில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி, ரூ. 9 கோடி வென்றிருந்தது. வரும் 2011 ம் ஆண்டு நடக்க உள்ள தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 45 கோடி
புதுடில்லி: ""உலக கோப்பை ("டுவென்டி-20) தொடரின் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும், என, பாகிஸ்தான் வீரர் சோகைல் தன்வீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீசில், 3வது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில், முழங்கால் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் சோகைல் தன்வீர் இடம்பெறவில்லை.
இது குறித்து தன்வீர் கூறியதாவது: காயம் காரணமாக, "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும், இத்தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதனால், இத்தொடரின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதை விரும்புகிறேன்.
ஐ.பி.எல்., தொடர் மூலம் இந்திய வீரர்கள் சிறந்த அனுபவம் பெற்றுள்ளனர்.
இந்த அனுபவம், உலக கோப்பை தொடரில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும். ஐ.பி.எல்., போட்டியில் விளையாடுவதன் மூலம், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.
இம்முறை ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க முடியாமல் போனது ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், இனிவரும் ஐ.பி.எல்., தொடரில், மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
இவ்வாறு சோகைல் தன்வீர் கூறினார்.
பெங்களூரு: அரையிறுதிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளின், பணத்தை திருப்பித் தருவதில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகள், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் லீக் போட்டியின் போது ஏற்பட்ட, குண்டு வெடிப்புகள் காரணமாக போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.
ஏற்கனவே 2 அரையிறுதிப் போட்டிக்குரிய டிக்கெட்டுகள், இங்கு விற்கப்பட்டுள்ளன. இதற்குரிய பணத்தை, மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல், சின்னச்சாமி மைதானத்தின், 9 வது கவுன்டர் முன், நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூட்டம் கூடியது. அரை மணி நேரம் தாமதமாக 11 மணி முதல், பணம் திருப்பி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடிவிட்டது. இந்நிலையில் பண பற்றாக்குறை காரணமாக, அடுத்த அரைமணி நேரத்தில் கவுன்டர் மூடப்பட்டது.
இரண்டு போட்டிகளுக்காக, சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், ஒரு கவுன்டரில் மட்டும் பணம் வழங்கப்பட, ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.
இதுகுறித்து பாண்டே என்பவர் கூறுகையில்,"" எனக்கு 50 டிக்கெட்டுக்குரிய, 63 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் திருப்பித்தர வேண்டும். ஆனால் அவர்கள் என்னை அலுவலகத்துக்கு செல்லுமாறு, அலைய விடுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு போட்டியை பார்த்து வரும் எனக்கு, இதுபோன்ற அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை,'' என்றார்.
ஐ.பி.எல்., தொடரில் இன்று காம்பிர் தலைமையிலான டில்லி அணி, கங்குலியின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதலாவது லீக் போட்டியில் டில்லியிடம் தோல்வி அடைந்த கோல்கட்டா அணி, இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் இன்று நடக்கும் 39வது லீக் போட்டியில் டில்லி டேர் டெவில்ஸ் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பேட்டிங் பலம்:
டில்லி அணிக்கு சேவக், வார்னர் அதிரடி துவக்கம் தருகின்றனர். காயம் குணமாகி அணிக்கு திரும்பிய கேப்டன் காம்பிர், வழக்கமான ஆட்டத்துக்கு இன்று மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "மிடில் ஆர்டரில்' கோலிங்வுட் அசத்தலான பார்மில் இருப்பது அணிக்கு பெரும் பலம். தவிர, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களும், அணியின் ரன்குவிப்புக்கு உதவுகிறார்கள்.
வெட்டோரி பலம்:
வேகப்பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் நெஹ்ரா, நானஸ் இல்லாத நிலையிலும், மகரூப், சங்வான் உள்ளிட்டவர்கள் சிறப்பாக சாதிக்கிறார்கள். இத்தொடரில் அதிக விக்கெட் (14) வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள, அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, இன்றும் அசத்தலாம். தவிர, வெட்டோரியின் வருகையும் சேர்ந்து கொள்ள, பவுலிங் பலம் அதிகரித்துள்ளது.
வருகிறார் மெக்கலம்:
கோல்கட்டா அணியை பொறுத்தவரையில் வெற்றி, தோல்வி நிலையில்லாமல் உள்ளது. இந்த அணியில் அதிக ரன்கள் குவித்து முன்னணியில் உள்ள கங்குலி (277 ரன்கள்), கெய்ல் வழக்கமான அதிரடிக்கு மாறியது ரசிகர்களுக்கு <உற்சாகம் தான். இவர்களுடன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அசத்திய பிரண்டன் மெக்கல்லம், இன்று சேர்ந்து கொள்வது கூடுதல் பலம் தான். இவர் "மிடில் ஆர்டரில்' டேவிட் ஹசிக்கு பதில் களமிறங்க வாய்ப்புள்ளது.
மோசமான பவுலிங்:
கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 200 ரன்கள் எடுத்தும், அணி தோல்வியடைந்தது. ஷேன் பாண்ட், லாங்கிவெல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் இன்று கைகொடுப்பார்கள் எனத் தெரிகிறது. சுழலில் முரளி கார்த்திக், கெய்ல் ஆறுதல் தரலாம்.
டில்லி முன்னிலை:
டில்லி அணி இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 6ல் வென்று, 3ல் தோல்வியடைந்துள்ளது. அடுத்த 5 போட்டியில் 2ல் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம். இதேநேரம் கோல்கட்டா அணி, 9ல் 4 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இன்று வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க, கோல்கட்டா எப்படியும் முயற்சிக்கும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
ஐ.பி.எல்., தொடரில் இன்று மாலை நடக்கும் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் வென்று அணி நிர்வாகத்துக்கு ஆறுதல் தருவதில் வீரர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்கு கடந்த போட்டியில் சதம் கடந்த ஜெயவர்தனா, கேப்டன் சங்ககரா, யுவராஜ் சிங், இர்பான் பதான் உதவலாம்.
பவுலிங்கில் திரான், ஸ்ரீவஸ்தவா, ரமேஷ் பவார், பியுஸ் சாவ்லாவும் கைகொடுப்பது உறுதி.
கடந்த போட்டியில் டெக்கானுக்கு எதிரான "திரில்' வெற்றியை அடுத்து ராஜஸ்தான் அணி உற்சாகத்தில் உள்ளது. வாட்சன் அணிக்கு திரும்பியிருப்பது பேட்டிங் பலத்தை அதிகரிக்கிறது.
லம்ப், நமன் ஓஜா, யூசுப் பதான், ஜுன்ஜுன்வாலா ஆகியோருடன் வார்னின் "மாயாஜால' சுழல், திரிவேதி, வாட்சனின் மித வேகப்பந்து வீச்சு போன்றவை அணிக்கு வெற்றி தேடித்தரும் என நம்பப்படுகிறது.
அதிரடியாக "பேட்' செய்து ரன் குவிப்பது தான் எனது பலம். எனது இயல்பான ஆட்டத்தை மாற்ற விரும்பவில்லை,'' என சேவக் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் சேவக். இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் (6691 ரன்), 221 ஒரு நாள் போட்டிகளில் (7091 ரன்கள்) விளையாடியுள்ளார். அதிரடியாக ஆடுவதால், விரைவில் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார் என்ற விமர்சனம் சேவக் மீது எழுந்துள்ளது.
இது குறித்து சேவக் கூறியது:
அதிரடியாக ஆடுவது தான் எனது இயல்பான ஆட்டம். இதன் மூலம் தான் சர்வதேச அரங்கில் அதிக ரன்களை குவித்துள்ளேன். பந்துகளை வீணடிப்பதை நான் விரும்பவில்லை. தற்போது "ஷாட்களை' தேர்வு செய்வதில் கவனமாக உள்ளேன். அதிரடியாகவும், அதே சமயத்தில் தற்காப்பாகவும் ஆட முயற்சித்து வருகிறேன். கங்குலி, டிராவிட், கும்ளே, தோனி ஆகியோரது தலைமையில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளேன். அனைவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு ஊக்கமளித்தனர்.
பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சகஜமாக எடுத்துக் கொள்வது நல்லது. சிறப்பாக ஆடி ரன் குவிக்கும் பட்சத்தில் வாழ்த்துக்கள் குவியும். அதே நேரம் ரன் சேர்க்க திணறும் போது, விமர்சனங்கள் எழும். என் மீது எழும் விமர்சனங்களுக்கு, "பேட்' மூலமே பதிலளிக்க விரும்புகிறேன். இவ்வாறு சேவக் தெரிவித்தார்.
மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவோம்,'' என, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பயிற்சியாளர் டாம் மூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில்,இதுவரை 9 போட்டிகளில் விளையாடிள்ள பஞ்சாப் அணி 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது. ஆனால் பஞ்சாப் அணி பயிற்சியாளர் டாம் மூடி, இன்னும் நம்பிக்கை இழக்காமல் உள்ளார். இது குறித்து அவர் கூறியது:
பஞ்சாப் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு முடிந்து விடவில்லை.
இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை எட்ட கடுமையாக முயற்சிப்போம். முன்னணி வீரர்களின் காயம் மற்றும் மோசமான பார்ம் தான் அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த லீக் போட்டியில் வெற்றி பெற்றது புதிய உற்சாகம் அளித்துள்ளது.
அணியின் பந்து வீச்சு திருப்திகரமாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. ஷேன் வாட்சன், யூசுப் பதான், நமன் ஓஜா ஆகியோரை விரைவில் அவுட்டாக்க வியூகம் வகுத்துள்ளோம். இவ்வாறு மூடி தெரிவித்தார்.
மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 4 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்திருந்தது.பின்னர் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி போராடி ரன்களை எடுத்து வந்தாலும் மறுபக்கத்தில் விக்கெட்களை தொடர்ச்சியாக இழந்து வந்தது.
எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மட்டும் நிதானமாக மறு முனையில் தாக்குப்பிடித்து வந்தார். 15 ஆவது ஓவரில் பந்து மாற்றப்பட்டது. 23 பந்துகளுக்கு 62 ஓட்டங்கள் எடுத்தால் மாத்திரமே மும்பை அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. இவ்வேளையில் மும்பை அணிக்கு ஒரே ஆறுதலாக இருந்த சச்சின் டெண்டுல்கர் அடித்து ஆட முனையும் போது அவரும் 45 ரண்களில் கேட்ச் மூலம் ஆட்டம் இழந்து சென்றார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ரண்களால் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் சென்னை அணி 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அடுத்த 5 போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றால் தான், அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்த சென்னை அணி தற்போது ஒரு போட்டியை வென்றுள்ளது இன்னும் 3 போட்டிகளில் வென்றால் மாத்திரமே அரை இறுதிக்கு செல்ல முடியும்.
புதுப் பலம் பெற்றுள்ள சென்னை அணி இனி தன் திறமையை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்
இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.
கடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, இன்றும் தனது அசத்தலை தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மும்பை இன்று, வென்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற நினைக்கலாம்.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று சென்னையில் நடக்கும் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
தொடருமா எழுச்சி?
தொடர்ச்சியான நான்கு தோல்விக்கு பின் எழுச்சி கண்ட சென்னை அணி, பேட்டிங் எழுச்சி பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை வென்றது. இன்றும் இது தொடரும் என நம்பலாம். இதற்கு, "அதிரடி' நாயகன் முரளி விஜய், ரெய்னா, தோனி மற்றும் மார்கல் உதவுவார்கள் என தெரிகிறது. தவிர, கடந்த சில போட்டிகளில் ஏமாற்றும் ஹைடன் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் <உள்ளார். இல்லையெனில் மைக்கேல் ஹசி, வாய்ப்பு பெறுவது உறுதி. பவுலிங் நம்பிக்கை:
பவுலிங், பீல்டிங்கில் சொதப்புவது தான் சென்னை அணிக்கு பலவீனமாக உள்ளது. ஆனால் போலிஞ்சர் வரவால், தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவிர முரளிதரனும் அசத்துவதால், மும்பையின் ரன்குவிப்பை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. தவிர, மார்கல், ரெய்னாவும் ஆறுதல் தரலாம்.
சச்சின் பலம்:
கடந்த இரு தொடர்களில் இல்லாத வகையில், இம்முறை மும்பை அணி பெரும் எழுச்சி கண்டுள்ளது. இதற்கு சச்சினின் அசத்தலான "பார்ம்' மற்றும் இளம் வீரர்கள் எழுச்சியும் காரணம். தவிர, இன்று ஜெயசூர்யா, இதுவரை வாய்ப்பு பெறாத டுமினி ஆகியோர் களமிறங்கலாம். திவாரி, ராயுடு, சதீஷ் இன்றும் கலக்க காத்திருக்கிறார்கள்.
"பெஸ்ட்' பவுலிங்:
மும்பை அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஜாகிர் கான், மெக்லாரென், மலிங்கா போன்றவர்கள் இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அசத்துகிறார்கள். கடைசி நேரத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசுவதில் வல்லவர்களான இவர்கள், எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்துகின்றனர். சுழலில் ஹர்பஜன் மிரட்டல் தொடர்கிறது.
"டாஸ்' முக்கியம்:
"டுவென்டி-20' போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இன்று "டாஸ்' வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது <உறுதி. இருப்பினும், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் விளையாடிய சென்னை அணி, 180 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இதனால் இன்று கவனமாக விளையாடுவார்கள் என நம்பலாம். வெற்றி தேவை:
சென்னை அணி இதுவரை, பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றால் தான், அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. ஆனால் மும்பை அணியை பொறுத்த வரையில், பங்கேற்ற 8 போட்டியில் 7ல் வென்றுள்ளது. அடுத்து 6ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இதனால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்கான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி ஓவரில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. டெக்கான் வீரர் ரோகித் சர்மாவின் போராட்டம் வீணானது.மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று, தொடரின் 36வது லீக் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்தது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ், ஷேன் வார்ன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வார்ன், பேட்டிங் தேர்வு செய்தார்.
வாட்சன் அரைசதம்:
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு லம்ப் (15), நமன் ஓஜா (1) ஜோடி மோசமான துவக்கம் அளித்தது. பின்னர் இணைந்த பசல், வாட்சன் ஜோடி பொறுப்புடன் ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது, பசல் (36) அவுட்டானார். பின்னர் வந்த யூசுப் பதான் (5), ஜூன்ஜூன்வாலா (11), ராத் (0) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அபாரமாக ஆடிய வாட்சன், அரைசதமடித்து ஆறுதல் அளித்தார். இவர் 36 பந்தில் 58 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் ஏமாற்ற, ராஜஸ்தான் அணி 19.5 ஒவரில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. டெக்கான் அணி சார்பில் ஆர்.பி. சிங் 3, ஹாரிஸ், ஹர்மீத் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ரோகித் போராட்டம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு லட்சுமண் (6) மோசமான துவக்கம் அளித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் கில்கிறிஸ்ட், 17 பந்தில் 34 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சைமண்ட்ஸ் (15), அனிருத் சிங் (9), டுவைன் ஸ்மித் (4), பிளாகியா (2), ஹாரிஸ் (1) சோபிக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ரோகித் சர்மா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 6வது அரைசதமடித்தார்.
திரில் வெற்றி:
கடைசி ஒவரில் 3 விக்கெட் மீதமுள்ள நிலையில் டெக்கான் அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. இதில் டெக்கான் அணி 3 ரன்களுக்கு, 3 விக்கெட்டை பறிகொடுத்தது. இறுதியில் டெக்கான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. துல்லியமாக பந்துவீசிய வார்ன் 4, திரிவேதி 3, டோல் 2 விக்கெட் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி கேப்டன் வார்ன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோகித் "1000'
நேற்றைய போட்டியில் அரைசதமடித்து அசத்திய டெக்கான் அணியின் ரோகித் சர்மா, ஐ.பி.எல்., அரங்கில் 1000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இச்சாதனை படைத்த 4வது வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை 38 போட்டியில் பங்கேற்றுள்ள இவர், 6 அரைசதம் உட்பட 1024 ரன்கள் எடுத்துள்ளார். முன்னதாக கில்கிறிஸ்ட் (டெக்கான், 1143 ரன்கள்), ரெய்னா (சென்னை, 1102 ரன்கள்), ஹைடன் (சென்னை, 1022 ரன்கள்) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.
வார்ன் சுழல் ஜாலம்
நேற்றைய போட்டியில் சுழலில் மிரட்டிய ராஜஸ்தான் கேப்டன் வார்ன், 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 3வது ஐ.பி.எல்., தொடரில், ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மாத்யூஸ்
(கோல்கட்டா), மலிங்கா (மும்பை), வினய் குமார் (பெங்களூரு) ஆகியோருடன் இணைந்து கொண்டார். இவர்கள் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
டில்லி ஆடுகளம் "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்றதல்ல, என பெங்களூரு அணியின் கேப்டன் கும்ளே, குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டி, டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. ஆனால் ஆடுகளம் சரியில்லாததால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இம்மைதானத்துக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒரு ஆண்டு தடை விதித்தது. பின் புதுப்பிக்கப்பட்ட ஆடுகளத்தில் தற்போது மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் டில்லி அணி, பெங்களூருவை வீழ்த்தியது. இதுகுறித்து பெங்களூரு கேப்டன் கும்ளே கூறியது:
பெரோஷா ஆடுகளம் "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்றவகையில் இல்லை. இது மெதுவாக உள்ளது. பந்து வேகம் குறைவாகவும் அதேநேரத்தில் சற்று, திருப்பத்துடனும் வருகிறது. என்ன செய்வது என உடனடியாக முடிவுக்கு வரமுடியவில்லை. இங்கு "டாஸ்' வெல்வது மிகவும் முக்கியம். தவிர, இது போன்ற ஆடுகளத்தில், இரண்டாவதாக பேட்டிங் செய்து, 180க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்வது, மிகவும் கடினம்.
இவ்வாறு கும்ளே கூறினார்.
உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வெளியிடும் மீடியாக்களுக்கு, கண்டனம் தெரிவித்துள்ளார் யுவராஜ்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி வருகிறார் யுவராஜ் சிங். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது செயல்பாடுகள், அணிக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளன. இதனால் பஞ்சாப் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. மோசமான பார்ம், பாதுகாப்பு விதிமீறல், கேப்டன் சங்ககராவுடன் மோதல் என அடிக்கடி மீடியாக்களில் யுவராஜ் பற்றிய செய்திகள் வெளியாயின. இதனால் கடும் அதிருப்தியில் உள்ளார் யுவராஜ். இது குறித்து அவர் கூறியது:
மீடியாக்களில் என்னைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவருவது வருத்தம் அளிக்கிறது. எனது தனிப்பட்ட சுதந்திரத்தில் மீடியாக்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள், போலீஸ் போல தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக ஒரு சில போட்டிகளில், சிறப்பாக ஆடி ரன் குவிக்க முடியாமல் போய் விடுகிறது. "பார்ம்' இன்றி தவித்து வரும் சமயத்தில், தங்களால் முயன்ற வரை மீடியாக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. ஐ.பி.எல்., தொடரில், நான் மட்டுமா "பார்ட்டிகளில்' பங்கேற்று வருகிறேன். அனைத்து வீரர்களும் "பார்ட்டிகளில்' பங்கேற்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னை மட்டும் குறி வைத்து செய்திகள் வெளியிடுகின்றனர்.
ஐ.பி.எல்., போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவித்திருந்தால், என்னைப் பற்றிய பொய்யான செய்திகள் வெளிவந்திருக்காது. விரைவில் "பார்மை' மீட்டு, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பேன். இவ்வாறு யுவராஜ் கூறினார்.
சானியா, சோயப் மாலிக் திருமணம் நடப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆயிஷா குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வரதட்சனை கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சோயப் மாலிக்கிடம், ஐதராபாத் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து சோயப்மாலிக்கின் "பாஸ்போர்ட்' பறிமுதல் செய்யப்பட்டது.இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இடையே வரும் 15ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ஐதராபாத்தை சேர்ந்த ஆயிஷா என்ற பெண் சர்ச்சையை கிளப்பினார். தனக்கும் சோயப் மாலிக்கிற்கும் இடையே கடந்த 2002ல் தொலைபேசி மூலம் திருமணம் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். தன்னை முறைப்படி மாலிக் விவாகரத்து செய்யாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டினார். ஆயிஷாவின் தந்தை சித்திக் ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், அச்சுறுத்தல் (506), ஏமாற்றுதல் (420), வரதட்சனை கொடுமை (498, ஏ) உள்ளிட்ட பிரிவுகளில் மாலிக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
"பாஸ்போர்ட்' பறிமுதல்:
திருமணம் தொடர்பாக கலந்து ஆலோசிக்க, சானியா வீட்டுக்கு வந்த சோயப் மாலிக்கிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து ஐதராபாத் போலீஸ் கமிஷ்னர் திருமலா ராவ் கூறுகையில்,"" மாலிக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. சானியா வீட்டில் உள்ள மாலிக், போலீசாருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்தார். அப்போது சானியாவும் உடனிருந்தார். மாலிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது "பாஸ்போர்ட்' தற்போது எங்கள் வசம் உள்ளது. வழக்கு விசாரணை முடியும் வரை, எங்கும் செல்ல வேண்டாம் என மாலிக்கிடம் வலியுறுத்தி உள்ளோம்,'' என்றார். அதே சமயம் மாலிக் மீது குற்றம் சாட்டியுள்ள ஆயிஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டதன் மூலம், கருவுற்றதாக அடைந்ததாக ஆயிஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" கடந்த 2002 ம் ஆண்டு சோயப் மாலிக் என்னை திருமணம் செய்து கொண்டது உண்மை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் மூலம் நான் கர்ப்பம் அடைந்தேன். ஆனால் அது கலைந்து விட்டது. சரியான நேரத்தில் ஆதாரங்களை தெரிவிப்பேன்,'' என்றார். சோயப் மாலிக்குடன் இணைந்து இருப்பது போன்ற "போட்டோ' ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஆயிஷா.
சோயப் மாலிக் மீது பாகிஸ்தானில் வழக்கு தொடருவோம் என ஆயிஷாவின் வக்கீல் பரூக் ஹாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஆயிஷாவின் குடும்பத்தினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். போதுமான ஆதாரங்களை தருவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களில் லாகூர் கோர்ட்டில், ஏமாற்றுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில், மாலிக் மீது வழக்கு தொடர உள்ளேன். மாலிக் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். சானியா-மாலிக்கின் திருமணத்தை நிறுத்துவதே தற்போது எங்களது குறிக்கோள்,'' என்றார்.
